இந்நேரம்
யு.பி.எஸ்.ஆர் தேர்வின் முடிவுகள் வெளியாகி இருக்கும். அனல் பரக்கும் செய்திகள்
...அழகான புகைப்படங்கள்...அலங்கரிக்கும் 7எ வண்ணப்படங்கள். எப்படியும் 40% சதவிகித
மாணவர்கள் ஒரு பாடம் அல்லது ஒரு சில பாடங்களில் தேர்ச்சிப் பெறாமல் இருக்கலாம்.
இதில் 6எ பெற்ற மாணவர்களின் நிலை இன்னும் பரிதாபமானது. சிரிப்பொலிக்கு இடையே சிதைந்து
போன மனங்களுக்கு தட்டிக் கொடுக்கும் எழுத்துகள் தான் இக்கட்டுரை.
எஸ்.பி.எம் தேர்வினை
வேண்டும் என்றால் முடிவுகள் என்று கூறுங்கள். ஆனால், யு.பி.எஸ்.ஆர் தேர்வினை முடிவுகள் என்று சொல்லாதீர்கள், மாறாக பதிவுகள் என்று சொல்லுங்கள். முடிவிற்கும் பதிவிற்கும் வித்தாயாசம்
உள்ளது. யு.பி.எஸ்.ஆர் என்பது முடிவு அல்ல, ஆரம்பம்.
வாழ்வில் தன்னை அடுத்தக் கட்டத்திற்கு பதிவு
செய்திருக்கிறார்கள்.வருத்தப்படாதீர்கள் மாணவர்களே,
உங்களுடைய வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. தோற்றவர்களைப் பற்றி நான் பேச
வரவில்லை,உங்களைத் தேற்ற வந்துள்ளேன். தோல்வியை எப்படி
வேள்வியாக மாற்றுவது என்பது தான் என் கேள்வி. உன் விதியை இறைவனோ,கல்வி அமைச்சோ அல்லது ஆசிரியர்களோ எழுதவில்லை. உன் கைகளில் நீ எழுதினாய்
என்று நம்பு. அதே எழுதுகோல் மீண்டும் உன்னிடம்
கொடுக்கப்படும். எழுதிவிடு நீ யாரென்று.
யாரேனும் உங்களின்
முடிவைக் கேட்டால் மனந்திறந்து சொல்லி விடுங்கள் இது முடிவல்ல, வாய்ப்பு என்று. மாணவர்களே, உங்களின்
முயற்சியின் பலனைத்தான் முடிவாக பெற்றீர்களே தவிர விதியை அல்ல. முயற்சியை
அதிகரியுங்கள். உயர்ச்சி உங்களைத் தேடி வரும். ‘கீழே விழுவது
தவறல்ல,மீண்டும் எழாததுதான் தவறு’ என்ற
வரியினை ஞாபகத்தில் பதித்துக் கொள்ளுங்கள். எழு என்ற வார்த்தையில் தான் உங்களின்
அடுத்த அடி வைக்கப்படுகிறது. உங்களை இடைநிலைப்பள்ளி அழைக்கக் காத்திருக்கிறது.
நீங்கள் ஏன் கடைநிலை குரலுக்குச் செவி சாய்க்க வேண்டும். விடை கொடு தாயே என்று
உங்களின் பெற்றோர்களின் காலடியில் சாய்ந்து விடுங்கள். பாய்ந்து வரும்
விமர்சனங்கள் தூர்ந்து விடும்.
உன் தாயின்
கருவரையில் முந்திக் கொண்டு பிறந்தவன் நீ. அப்படியிருக்க, வகுப்பறையில் நீ பிந்தி விட்டாய் என்று சொல்ல யாருக்கு
தைரியம் இருக்கிறது? நீ நிமிர்ந்தாயா என்பது கேள்வியேத் தவிர
இமயம் உயரமானது அல்ல. காரணம் நீ நிமிராதவரை இமயமும் உயரமானதுதான். உன் வாழ்வின்
10% சதவிகிதம் என்ன நடந்தது என்பது தான். ஆனால் வாழ்வின் 90% சதவிகிதம் நீ எப்படி
நடந்துக் கொண்டாய் என்பதே முக்கியம். அதனால் தான் மீண்டும் சொல்கிறேன், உன் பாதங்களைத் தாயார் செய்து கொள், காராணம்
பாதைகள் உனக்காக காத்திருக்கின்றன.
‘நேற்றெனல்
வேறு இன்றெனல் வேறு,
நேற்று
இருந்தது போல் இன்றிருந்திடாதே,
நேற்றைய
வளர்ச்சியுள் நினைவொடுக்காதே’
என்ற புலவர் பெருஞ்சித்திரனாரின்
வரிகளை மனதில் கொள்.மறந்து விடாதே...விடியலுக்கில்லை தூரம்...இருந்தும் மனதில்
இன்னும் ஏன் பாரம்?
இந்நிலையில் பிள்ளைகளைத் திட்டிப்
பாருங்கள், வார்த்தைகள் சிதரும்.மாறாக, வாழ்த்திப் பாருங்கள் வார்த்தைகள் மலரும் ஒளிரும். எதுவாக இருந்தாலும்
அந்த வார்த்தைகள் அவர்கள் மனதிலே ஒரு தாக்கத்தை உருவாக்கி விடும். அதனால் தான்
பெற்றோர்கள் மிக கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டும். அம்பில் இருந்து வந்த
வில்லும் வாயில் இருந்து வந்த சொல்லும்
அதன் தன்மையைக் காட்டாமல் மீண்டும் செல்லாது என்பார்கள். சொல்லின் தாக்கம் அவ்வளவு
ஆழமானது.
அதனால் தான் இது திட்டும் நேரமல்ல, தட்டிக் கொடுக்கும் நேரம் என்று வலியுறுத்துகின்றோம்.
சாவியும் சுத்தியலும் பேசிக் கொண்ட கதையைக்
கேளுங்கள். சுத்தியல் சாவியைப் பார்த்துக் கேட்டது, “என்னைக் கொண்டு கடினமானவற்றை உடைக்கிறார்கள் திறக்கிறார்கள்.
ஆனால், உன்னைக் கொண்டு இலகுவாகப்
பூட்டைத் திறந்து விடுகிறார்களே,அது எப்படி
முடிகிறது?”
அதற்குச் சாவி சொன்னச் செய்தியைத் தான் நாம்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாவி சொன்னது, “எதையுமே கடுமையைப் பயன்படுத்தாமல்
மென்மையைப் பயன்படுத்த வேண்டும்.பூட்டைத் திறப்பது போல் ஒருவருடைய இதயத்தின் உள்ளே
சென்று ஆழமாகப் பார்க்க வேண்டும்.அப்பொழுது தான் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து
கொள்ள வேண்டும்.” ஆசிரியர்களோ பெற்றோர்களோ
தோல்வியடைந்த மாணவர்களை அழைத்து சுத்தியலைப் போன்று வார்த்தையில் அடித்து
விடாதீர்கள், மாறாக சாவியைப் போன்று இதயத்தில்
நுழைந்து வார்த்தையில் அலங்கரித்து விடுங்கள்.
ஓடாத கடிகாரம்
கூட இரண்டு முறை மணிக்காட்டும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? உலக வெற்றியாளர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில்
தோற்றவர்கள்தாம். தோல்வியே மிகச் சிறந்த ஆசான் என்பார்கள் என்பார்கள். எதுவாக
இருந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் பேசுங்கள். அரவணைத்து ஆசீர்வதியுங்கள். இன்னும்
நெடுந்தூரம் செல்ல வேண்டும். பாசத்தினூடே புதிய பாதையைத் திறந்து விடுங்கள். நம்
பிள்ளைகள் அழப் பிறந்தவர்கள் அல்ல, மாறாக வாழப்
பிறந்தவர்கள். உங்கள் பிள்ளைகள் சாதிக்கப் பிறந்தவர்கள். நிச்சயம் ஒரு நாள்
சரித்திரம் இவர்கள் பெயரைச் சொல்லும். நம்புங்கள். நலம் பெறுவீர்கள்.
நமக்கு
வெவ்வேறு உலகம் இருந்தாலும் நம் பிள்ளைகளுக்கு ஒரே உகம் நாம் தான். ஓடி வரும்
அவர்களை வேதனைப்படுத்திவிட வேண்டாம். சாதிப்பதற்கு இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள்
இருக்கின்றது. யு.பி.எஸ்.ஆர் என்பது நான்கெழுத்து மந்திரம் கிடையாது. தேர்வை
வெல்வதற்கு தந்திரத்தைச் செல்லிக் கொடுங்கள். தேர்வின் பயம் தூர்ந்துப் போகட்டும்.
புதிய நம்பிக்கை வேர்விடட்டும். துளிர்கத் துடிக்கும் மனங்களைக் கிள்ளி
விடாதீர்கள். காயப்பட்ட நெஞ்சங்களுக்குத் தேவை ஆருதல் வார்த்தைகள், அன்பான அரவணைப்பு. விதி
ஒரு கதவை
மூடும் பொழுது நம்பிக்கை ஒரு கதவைத் திறக்கும் என்பார்கள். இடைநிலைப் பள்ளி
உடனடியாக அழைக்கக் காத்திருக்கிறது. நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கும் பாதங்கள் பதிக்கப்பட வேண்டும்.
மிதிக்கப்படக்கூடாது. தனித்து யோசித்துப் பாருங்கள். தாலாட்ட வார்த்தைகள்
கிடைக்கும். இது திட்டிக் கொண்டிருக்கும்
நேரமல்ல, தட்டிக் கொடுக்கும் நேரம்.