உலகத்தில் எத்தனையோ தினங்கள்
வந்து போகின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி அர்த்தங்கள் உடையவை. அதில் அதி முக்கிய
தினம் தான் உலக புத்தகத் தானம். பிறந்த ஒவ்வொரு மனிதரும் கொண்டாடப்பட வேண்டிய
தினம் இது. ஓர் இனத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் புத்தகத்தின் தாக்கம் அளப்பரியது.
வாசிக்கும் இனத்திற்கு மட்டுமே வாசல்கள் திறக்கப்படும் என்கிற வாசகத்தைக் கொஞ்சம்
நினைத்துப் பாருங்கள். ‘புத்தகம் இல்லாத
ஓர் அறை, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது’ என்று மார்கஸ் தெல்லியுஸ் கூறியிருப்பது சிந்திக்கத்
தக்கது.
இனி வெல்வதற்கு உலகு இல்லையே
என்று வியந்து நின்ற மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவைப் படை எடுக்கச் சென்ற போது, அவரிடம் அந்நாட்டு அறிஞர்கள் கேட்டுக் கொண்டது என்ன
தெரியுமா? இந்தியாவில் எழுதப்பட்ட மிகச்
சிறந்த புத்தகங்களை எடுத்து வாருங்கள் என்றார்களாம். அந்த அளவிற்கு புத்தகங்கள்
ஆற்றல் வாய்ந்த, சக்தி வாய்ந்த ஆயுதமாகக்
கருதப்படுகிறது. புத்தகம் என்பது மனிதனின் அடையாளம். மனிதனின் பொக்கிஷம்.
புத்தகத்தின் வாயிலாக பிறந்ததுதான் வாசிப்பு. வாசிப்பது ஓர் ஆன்மாவின் இராகம்.
புத்தகத்தை எழுதிய அந்த அன்மாவோடு நாம் பேச முடியும். வாசிப்பு பழக்கம் அந்த
வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.
ஒவ்வொரு முறையும் நாம்
புத்தகத்தை மேலிருந்து கீழே வரை வாசிப்போம். ஆனால், புத்தகங்களோ நம்மை கீழிருக்கும் நம்மை மேலே உயர்த்துகிறது என்பதை எத்தனைப்
பேர் நம்மில் உணர்ந்திருப்போம்? தமிழில் மிகத்
தொன்மையான நூல் தொல்காப்பியம். தமிழினம் உலகத்தை ஆண்ட பரம்பரை என்பதற்கு இதைத்
தவிர வேறு எதைச் சொல்ல முடியும்?
தொல்காப்பியத்திற்கு முன் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் ஆழிப் பேரலையால்
விழுங்கப்பட்டாலும், கிடைக்கப்பட்ட மீதமுள்ள
நூல்களையாவது பாதுகாத்து வாசித்தோமா என்பதே கேள்வி. அத்தகைய உறுதி மொழியை இந்தத் தருணத்திலாவது
எடுக்க முயல வேண்டும்.
ஜோகன் டிக்கின்ஸ் என்பவர் ‘broken the hell’ என்ற புத்தகத்தைத் தேடி 12
ஆண்டுகளாக ஏறக்குறைய 16,000
ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை நடந்து அலைந்து திரிந்திருக்கிறார். இந்த 12
ஆண்டுகளில் டிக்கின்ஸ் தன் குடும்பம்,
உறவு, பணம் அனைத்தையும்
இழந்திருக்கிறார். ஆனால், அந்த புத்தகத்தைக்
கண்டுபிடித்தத் தருணத்தில் உலகத்தையே வென்றவர் போல் ஆனந்தப்பட்டிருக்கிறார்.
டிக்கன்ஸ் போன்று நாம் அலையத் தேவையில்லை. கண்ணிற்கு எட்டிய தூரம் புத்தகக்கடைகள்.
ஆனால், பாதங்கள் தயாராக இல்லையே? சமீபத்தில் தெ ஸ்தார் ஆங்கில நாளேட்டில் வாசிப்பு
தொடர்பான ஆய்வினை வெளியிட்டிருந்தது.
அந்த ஆய்வின் படி, ஒரு வாரத்தில் சராசரி இந்தியாவில் 10 மணி 42 நிமிடம்
வாசிப்பிற்குச் செலவிடுகிறார்களாம். அதற்கு அடுத்து, தாய்லாந்து (9 மணி 24 நிமிடம்),
மூன்றாவதாக சீனா (8 மணி நேரம்), நான்காவது
பிலிப்பைன்ஸ் (7 மணி 36 நிமிடம்), ஐந்தாவது எஜிப் (7
மணி 30 நிமிடம்), ஆறாவது செக் குடியரசு (7 மணி 24
நிமிடம்). இதில் ஆச்சர்யம் என்னவெனில் அமெரிக்கா (5 மணி 42 நிமிடம்) என்று பின்
தள்ளப்பட்டுள்ளது. இதேப்போன்று 30 நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்தப்
பட்டியலில் மலேசியாவிற்கு நிச்சயமாக இடமில்லை. 2005-ஆம் ஆண்டின் கணக்கின்படி
ஆண்டிற்கு சராசரி மலேசியர்கள் 2 புத்தகங்களே வாசிக்கின்றனர் என்று புள்ளி
விபரங்கள் காட்டுகின்றன.
மலேசியர்கள் பெரும்பாலும்
தங்களுடைய நேரத்தை வாசிப்பதை விட இணையம்,
சமூக வலைத்தலங்கள் மற்றும் விவேக கைப்பேசியில் அதிகமாக செலவிடுகின்றனர் என்று
இன்னொரு அறிக்கைக் காட்டுகிறது. சமூக வலைத்தளங்களைத் தவிர்க்க முடியா விட்டாலும்
குறைத்துக் கொள்ளலாம் அல்லவா? ‘நூலறிவே
ஆகுமாம் நூண்ணறிவு’ என்பார்கள். அத்தகைய நுண்ணறிவைப்
பெற்ற குமுகாயமே மேல் நிலைக்கு உயர்கிறது. உலக வரலாற்றையே மாற்றி அமைக்கக் கூடிய
சக்தி நூல்களுக்கு இருக்கிறது. மனிதனின் உன்னதப் படைப்பு புத்தகம் என்றால் அது
மிகையாகாது. புத்தகங்களுக்கு தரும் தொகை செலவல்ல; மூலதனம். பன்மங்காக மீண்டும் நமக்கு திரும்ப வரும்.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தான்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்பிராகாம் லிங்கன். அவரின் தந்தை ஒரு செருப்புத்
தைக்கும் தொழிலாளி. எப்படி ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி அமெரிக்காவின் ஈடு
இணையற்ற அதிபராக முடிந்தது? சிறு வயதிலே
லிங்கன் அவர்கள் நாள்தோறும் 10 கிலோ மீட்டர் வரை கால் நடையாக சென்று புத்தகம்
இரவல் வாங்கி வந்து படிப்பாராம். சாதாரண ஆளை அசாதாரண ஆளாக உருவாக்கியது நிச்சயம்
புத்தகத்தையே சாரும். வாசிப்பை ஒரு பண்பாடாக உருவாக்கிய சமூதாயம் வீழ்ந்த தாக
சரித்திரம் இல்லை. ஜப்பான் நாட்டு மக்கள் இதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு. பொது
இடங்களில் அவர்கள் எப்பொழுதும் கைகளில் புத்தகங்களோடு தான் இருப்பார்கள்.
வாசிக்கத் தெரிந்த இனம் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.
மனோதத்துவத்தில் நல்ல விடயங்களைப் நாம் படிக்கும் பொழுது அது
நம்மைக் காப்பாற்றும் என்பார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? வாசிக்கும் பொழுது நம் ஆத்மா அந்த நூலோடு ஒன்றித்து
விடுகிறது. ஒன்றித்து விட்ட நிலையில் நம் மனம் ஆல்பா நிலையில் செயல்படத்
துவங்குகிறது. அப்பொழுது, அந்த நூலில்
குறிக்கப்பட்ட அத்துனை விடயங்களும் நம் ஆள் மனதில் பதிந்து பிரபஞ்ச மனதுடன்
தொடர்பு கொள்கிறது. இதைத் தான் இறைத் தொடர்பு என்பார்கள். அதனால் தான், நல்ல நூல்கள் நம்மைக் காப்பாற்றும் என்கிறார்கள்.
எனவே, இந்த உலக புத்தகத் தினத்தை அர்த்த முள்ளதாக்குவோம். அடுத்தத் தலைமுறைக்கு
நாம் கொடுக்க வேண்டியது எதுவாக இருந்தாலும் அது முதலில் புத்தகமாகட்டும்.
பரிசுகளில் மிகச் சிறந்த பரிசாக புத்தகங்களைப் பரிசளிப்போம். அனைவருக்கும் உலக
புத்தகத் தின வாழ்த்துகள்.