எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

தேசியக் கல்வித் தத்துவத்தை உணர்ந்தவங்களா நீங்கள்...


                   தேசிய கல்வித் தத்துவத்தை அறிந்தவர்களா என்று கேட்கவில்லை, உணர்ந்தவர்களா என்று தான் கேட்டேன். உணர்ந்தால் தான் அங்கு விழிப்புணர்வு ஏற்படும். விவேகானந்தரும் எழுமின் விழிமின் என்று முழங்கியது சிந்திக்கத்தக்கது. தேசியக் கல்வித் தத்துவம் ஆசிரியர்களின் வேதம். மகாபாரதத்தில் அர்ச்சுணனுக்கு கிருஸ்ணர் தேரோட்டியதைப் போல் ஆசிரியர்களுக்கு இக்கல்வித் தத்துவமே வழிகாட்டி. அதில் காணப்படும் ஒரு வரியை மட்டும் எடுத்து விளக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

                   ‘memperkembangkan lagi potensi individu’ அல்லது தனிமனித ஆற்றலை மேலும் வளர்ப்பதாகும். இங்கு இரண்டு விடயங்கள் தெளிவாகின்றது. ஒன்று, மறைந்திருக்கும் ஆற்றல். இரண்டு, வளர்க்க வேண்டும். உலகில் மனிதனுக்கு மட்டும் தான் தன்னுடைய ஆற்றலை ஒருவர் சொல்லி வளர்க்க வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்க வேண்டும்.மீன் தன் மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவில்லை. பறவை தன் குஞ்சுக்குப் பறக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. சிறுத்தை தன் குட்டிக்கு ஓடக் கற்றுக் கொடுப்பதில்லை. இவை எல்லாம் மனிதனுக்கு மட்டும் தான். நாம் பிறக்கும் போதே ஒரு வெற்றியாளனாகத்தான் பிறக்கின்றோம் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
                   ஒரு குழந்தைப் பிறக்கும் பொழுதே 9 வகையான நுண் அறிவுத்திறனுடன் பிறக்கிறது என்று மேலை நாட்டு அறிஞர் டாக்டர் ஹாவர்டு கார்டனர் நிரூபித்திருக்கின்றார். அவை visual spatial-(இடம்சார்), Bodily-kinesthetic-(உடல் தசை இயக்கம்), Musical-(இசை), Interpersonal-(இரு வழி உறவு), Intrapersonal-(உள் உணர்வு), Linguistic-(மொழியியல்), Logical -Mathematical –(தருக்க கணித அறிவு),Naturalist-(இயற்கை) மற்றும் existential-(இருத்தலியல்). ஒவ்வொரு மாணவர்க்கும் நிச்சயம் இதில் ஒன்றாவது மிகுந்து காணப்படும். ஆனால், அதை அறிய வேண்டும். அதைத் தான் நம் தேசியக் கல்வித் தத்துவம் போதிக்கின்றது. இத்திறன்களைப் பாடம் கற்பிப்பது போல் கற்றுக் கொடுக்க முடியாது. வேண்டுமானால், பாடங்களை இத்திறனில் கற்றுக் கொடுக்கலாம்.

                   ஐயா அப்துல் கலாம் அவர்கள் சிறுவனாக இருந்த பொழுது அவரின் ஆசிரியர் திரு.சுப்பிரமணிய ஐயர் பறவைப் பறப்பதைக் காண்பிப்பதற்காக அனைவரையும் கடற்கறைக்கு அழைத்துச் சென்றாரே. அது போல கற்பிக்கப்பட வேண்டும். தன் இறுதி மூச்சி வரை ஐயா அவர்கள் திரு.சுப்பிரமணிய ஐயரை நினைவுக் கூர்ந்தார் என்றால் நடத்தப்பட்டது வெறும் பாடம் அல்ல, அவர் மனதிலே பதிய வைக்கப்பட்ட மிகப் பெரியப் படம்.
                   உங்கள் பையன் ஒரு முட்டால். கல்வி அவன் மண்டையில் ஏறாது என்று தோமஸ் ஆல்வா எடிசன் ஆசிரியைச் சொன்னது எப்படிப் பொய்யாகியது? அவரிடம் உள்ள அந்த நுண் அறிவுத்திறமையை வெளிக் கொணர்ந்த அவர் அம்மாவுக்கு எப்படி இது தெரிந்தது? சிந்திக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டின் முதல் மனிதனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல்பட் ஐன்ஸ்டையின்  தமது ஏழு வயது வரை பேசத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆசிரியர்கள் இவரை பின்தங்கிய மாணவன்,மூளை பாதிக்கப்பட்டவன் என்று முத்திரைக் குத்தினர். இவருக்குள் இருக்கும் அந்த நுண் அறிவுத்தறனை வெட்ட வெளிச்சம் போட்டது யார்? எப்படி? ‘கற்றனைத்தூறும் அறிவு என்பார் வள்ளுவர். தொடர் கற்றலினால் இவர்களின் அறிவு வெளிப்பட்டது.அவ்வளவு தான்.
                   பள்ளியில் வாசிக்கத் தெரியாத, எழுதத் தெரியாத மாணவனை பின் தங்கிய மாணவன் அல்லது கடைநிலை என்று  முத்திரைக் குத்தப்படுகிறான். நுண் அறிவாற்றலில் மொழியாற்றல் என்பது ஒரு திறன் தான். இன்னும் 8 வகையான நுண் திறன்கள் இருக்கும் பொழுது எப்படி ஒரு மாணவன் பின் தங்கிய மாணவனாவான்? தனது பன்னிரெண்டு வயதிற்குள்ளாகவே ஒரு மாணவனின் ஆற்றலை வரையறுத்துக் கூறுவது எவ்வகையில் நியாயமாகும். பன்னிரெண்டு வயதிற்குப் பிறகு ஒளிர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கும் பொழுது ஏன் இந்த அலட்சியம்? இராமாயணத்தில் இராவனனுக்குக் கூட இன்று போய் நாளை வா என்று வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், நம் மாணவர்களுக்கு யார் அந்த வாய்ப்பை வழங்குவது? தேசியக் கல்வித் தத்துவத்தை இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள்.

                   பள்ளிக்கூடம் ஒவ்வொரு மாணவர்கட்கும் தன் உண்மையான ஆற்றலை வெளிக்காட்டும் இடமாக அல்லது ஒரு தலமாக இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் ஒரு முறை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் அனைவரும் திடலில் காற்பந்து விளையாடுவதைப் பார்த்திருக்கின்றார். அப்பொழுது ஒரு பையன் மட்டும் தனியாக பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தான். அவனை உடனே கூப்பிட்டு, ‘பிறகு படிக்கலாம். உடனே சென்று அவர்களுடன் காற்பந்து விளையாடு. பிறகு வந்து சிறப்பாகப் படிக்கலாம் என்றார். விளையாட்டின் முக்கியத்துவமும் தனி மனித ஆற்றலையும் எவ்வளவு அழகாக சிவாமி விவேகானந்தர் விவரிக்கின்றார். இந்தச் சிந்தனை ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருந்தால் மாணவர்களின் ஆற்றலை இலகுவாக அடையாளம் காட்ட முடியும். மீண்டும் ஒரு முறை தேசியக் கல்வித்       தத்துவத்தை வாசித்து உணர்வீர்களாக.