எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

அர்ப்பணிப்பு அஃது நம் உடன்பிறப்பாகட்டும்...


                   ஆசிரியர்ப்பணி அறப்பணி,அதற்கு உன்னை அர்ப்பணி என்கிற அடைச்சொல் நீண்டகாலமாகவே விளங்கி வந்த ஒன்று. நாளடைவில் இச்சொல் கேட்பதற்கு அரிதாகி விட்டது. உண்மையில் அரிதாகியது இச்சொற்றொடரா அல்லது அதில் இருக்கும் பொருளா? எதுவாக இருந்தாலும் அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற எனக்கு 10 தன்னலமற்ற, அர்ப்பணிப்பு மிகுந்த, தூர நோக்கு சிந்தனையுடைய, தைரியமிக்க இளைஞர்களைக் கொடுங்கள் என்று சுவாமி விவேகானந்தர் அன்று கோட்டது இன்றும் எல்லா நாட்டுக்கும் பொருந்தும். நான் ஒரு தலைமையாசிரியராக இருப்பின் எனக்கு அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியர்களைக் கொடுங்கள் என்று மட்டுமே கேட்டிருப்பேன். அர்ப்பணிப்பு ஆசிரியர்களால் தான் இன்னமும் மலேசியத் திருநாட்டிலே தமிழ்ப்பள்ளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

                   ஆசிரியர் தொழில் என்பது சம்பாதிக்கும் இடமல்ல, சம்பாதிக்கும் மனிதர்களை உருவாக்கும் இடம். அதனால் தான் இதற்குப் பெயர் அறப்பணி. இந்த அறப்பணியில் நாம் அனைவரையும் வாழ்விக்கப் பிறந்துள்ளோம். நாம் மட்டும் வாழ அல்ல. அர்ப்பணிப்பை ஆதாரமாகக் கொண்டால் நிச்சயம் நமக்கு சேதாரம் இல்லை.அர்ப்பணிப்பு என்பது பிறவியில் வருவதல்ல, மாறாக நாம் வளர்த்துக் கொள்வது. அப்படி வளர்த்தவர்களுள் ஒருவர் தான் நாம் போற்றும் அன்னை தெரேசா. திடீரென்று  அர்ப்பணிப்பு பண்பை அவர்கள் வளர்த்துக் கொள்ள வில்லை. சிறுவது முதலே தான் கற்ற,படித்த, பார்த்த, அனுபவித்த விடயங்கள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

                   ஒரு முறை அன்னை தெரேசா விமானத்தில் பயணம் செய்யும் பொழுது பயணிகள் விமானத்தில் கொடுக்கப்பட்ட உயர்ந்த உணவுகளை விரயமாக்குவதைக் கண்டார். பிறகு, அனுமதி கேட்டு விரயமாகிய எல்லா உணவுகளையும் சேகரித்து வைத்து இல்லத்தில் வந்து கொடுத்ததை என்னவென்று சொல்வது? அந்த உயரிய அர்ப்பணிப்பை அவர் கற்றுக் கொண்டது அல்ல. அவர் ஆத்மார்த்தமாக எடுத்த முடிவு. அந்த ஈடுஇணையில்லாத அர்ப்பணிப்பில் ஒரு பாதி ஆசிரியர்கள் தத்தம் பள்ளிகளில் கொடுத்தால் பின் தங்கிய மாணவன் என்ற அடைமொழி அறுந்தேப் போகும் அல்லவா? 

                              நம் பள்ளியின் வளர்ச்சியும் அடைவு நிலையும் மற்றப் பள்ளிகளுக்கு நிகராக விளங்கும் அல்லவா? எல்லா ஆசிரியர்களும் அன்னை தெராசாவாக மாற வேண்டும் என்று நான் கூற வில்லை. அவர்கள் காண்பித்த அந்த உயரியப் பண்பைக் கற்றுக் கொண்டாலே போதுமானது. கற்றுக் கொண்டே இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள். கற்றல் என்பது நடத்தையில் எற்படும் நிரந்தர மாற்றம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

                   சமீபத்தில் வெளியான இறுதிச்சுற்று என்ற உண்மைச் சம்பவப்  படத்தில் நடிகர் மாதவன் குத்துச் சண்டைப் பயிற்சியாளராக நடித்திருப்பார். ஒரு சாதனையாளரை உருவாக்க அவர் தன் குடும்பம், வேலை, பணம், புகழ் ஆகிய அனைத்தையும் இழந்திருப்பார். இந்த அர்ப்பணிப்பின் விளைவுதான் ஓர் உலக குத்துச்சண்டை வீரரை உலகுக்கு உருவாக்கிக் காட்டியது. பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் பயிற்சியாளர்கள் தான். ஆனால், இது வரை ஒர் உலகத்தரம் வாய்ந்த மாணவர்களை உருவாக்கியிருக்கிறோமா என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். உலகத்தரத்தை நோக்கி உத்தமத் தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கத்திற்கு அடிப்படையாய் இருப்பது அர்ப்பணிப்பு உணர்வு.

                   மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் இன்னமும் தமிழ் வாழ்கிறது தமிழ்ப்பள்ளி வாழ்கின்றது என்றால் அதற்கு பின்னால் எத்தனை எத்தனை தியாகங்கள், அர்ப்பணிப்புகள், உழைப்புகள் இருக்கின்றன என்பனை மறந்துவிடலாகாது. இந்த 200 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை தமிழ்ப்பள்ளி உருவாக்கிவிட்டிருக்கிறது. ஆனால், அதில் ஒருவராவது உலகம் போற்றும் தமிழ்ப்பள்ளியை உருவாக்கிவிட்டிருக்கிறார்களா என்றால் அது ஒரு கேள்விக்குறிதான். நான் யாரையும் சாடவில்லை. என்னையும் சேர்த்து தான். கொடுத்த வேலையை மட்டும் செய்வது, ஒரு வட்டத்திற்குள்ளேயே இருப்பது, எதற்கெடுத்தாலும் காரணம் சொல்வது, வந்து விட்டு போகும் பண்பு, எல்லாவற்றுக்கும் குறை சொல்வது, தான் மற்றும் தன் குடும்பம் என்று வாழ்வது ஆகிய பண்புகள் அர்ப்பணிப்பு பண்புக்கு எதிரானது.


                   நாட்டில் 524 பள்ளிகளில் 2 பள்ளிகள் மட்டுமே இதுவரை உயர்நிலைப் பள்ளிகளாக (SEKOLAH BERPRESTASI TINGGI) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீதப்பள்ளிகள் அந்நிலையை அடைவதற்கு இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டும்? அந்நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்பு ஒன்றே போதுமானது என்பது என் கருத்து. வாய்ப்புகள் கிடைக்கவில்லை, கொடுக்கவில்லை என்று சொல்வதை விட வாய்ப்பை உருவாக்குவதே தலைசிறந்த தலைமைத்துவத்தின் அடையாளம். அர்ப்பணிப்பு நிறைந்த ஆசிரியர்கள் நிச்சயம் பிறக்க வில்லை. 

                        அவர்கள் பள்ளியின் தலைமைத்துவத்தினால் உருவாக்கப் படுகிறார்கள். அந்த உருவாக்கும் பண்பு சிறப்பாக இருந்தால் பள்ளிகள் செம்மையாகச் செயல்படும். இந்த உண்மைக்கு வராதவரை மேன்மை நிலையை அடைய வெகு தூரம் தான். அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவை அரவணைப்பு. ஆசிரியப் பணியில் யாவரும் சோடை போனவர்கள் கிடையாது. அர்ப்பணிக்கும் ஆசிரியர்களை அங்கீகரித்து விடுங்கள். ஆயிரம் நம்பிக்கைகள் ஆசிரியர் மனங்களில் கிளர்ந்தெழும்.