எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 9 ஜூலை, 2016

வெற்றியின் இரகசியம் வாழ்த்திப் பாருங்கள்...


                   உலகத்தில் தலை சிறந்த கல்வி கொள்கை நாடுகளில் ஐரோப்பா நாட்டைச் சார்ந்த பின்லாந்துஒன்று. அந்நாட்டின் தேர்வு முடிவின் விகிதாச்சாரம் 90% இருப்பதன் இரகசியத்தை யுனேஸ்கோ ஆய்வு மேற்கொண்டது. அம்முடிவின் இரகசியம் பெரும் ஆச்சிரியத்தைத் தந்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வருகின்றனர் என்பதே அந்த இரகசியமாகும்.

                    மகிழ்ச்சியான  மனோபாவத்திற்கும் பள்ளியின் வளர்ச்சிக்கும் நிச்சயம் தொடர்புண்டு. பள்ளியின் வளர்ச்சி வெறும் யு.பி.எஸ்.ஆர் தேர்வை மட்டும் கொண்டவை அல்ல. தேசியக் கல்வித் தத்துவத்தைக் கொஞ்சம் ஆய்ந்துப் பாருங்கள். எல்லா வகையிலும் ஒரு முழுமையடைந்த மாணவனை உருவாக்குவதே உயரிய நோக்கமாகும் என்று கூறுகிறது. அவ்வாறு ஒவ்வொரு மாணவர்களும் தத்தம் தனித் திறமைகளில் ஒளிர்விடும் பொழுது, பள்ளியின் வளர்ச்சியும் மேலெம்புகிறது. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி மனோபாவத்தில் ஆளப்படுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.ஆர் என்ற மகிழ்ச்சிக்குக் காத்திருப்பது உண்மைதான். ஆனால், ஆண்டு முழுதும் மகிழ்ச்சியை அனுபவிப்பது எவ்வளவு முக்கியம் என்று யோசித்துப் பாருங்கள்.

                   மேலை நாட்டு எழுத்தாளர் ஜோன் கோர்டன் தன்னுடைய வெற்றியாளர் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்ற கட்டுரையில் வெற்றியாளர்கள் எப்பொழுதும் சின்னச்சின்ன வெற்றிகளைப் பெரிதாகக் கொண்டாடுவர் என்று குறிப்பிட்டுள்ளார். சின்னச்சின்ன வெற்றிகளைக் கொண்டாடும் பொழுது மகிழ்ச்சி மனோபாவம் மேலோங்குகிறது. இந்த மகிழ்ச்சி மனோபாவம் பள்ளியின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. மாணவர்களுக்கு வகுப்பறை தான் முதன்மை உலகம். அவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அங்கு தான் ஆரம்பமாகிறது..முடிகிறது. ஆறாண்டுகள் என்பது அவர்களின் உடம்புக்கு மட்டும் அல்ல, அவர்களின் வளர்ச்சிக்கும் திறமைக்கும் தான். வகுப்பறையில்  திரும்பிப் பார்க்காத ஒரு மாணவனை எப்படி உலகம் திரும்பிப் பார்க்கும்?

                   இங்கு தான் இரகசியம் போதிக்கப்படுகிறது. பெரும்பாலானப் பள்ளிகளில் மாணவர்களின் தரத்திற்கு ஏற்ப வகுப்புகள் பிரிக்கப்பட்டிருக்கும். முதல் வகுப்புத் தரம்,தோற்றம் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் இருப்பார்கள். பின் தங்கிய வகுப்பின் தரம்,தோற்றம் மற்றும் அதே ஆசிரியர்கள் உற்சாகம் இழந்தும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். இந்த இருவேறு சூழ்நிலையில் தான்  பல்வேறு வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. முதல் நிலை வகுப்பிற்கும் கடை நிலை வகுப்பிற்கும் உள்ளப் பாடங்கள் ஒன்றுதான், ஆனால் வார்த்தையின் பதிவுகள் வெவ்வேறானவை. ஆசிரியர்களைக் குறைக் கூறுவது என் நோக்கம் அல்ல. கண்ணிற்குத் தெரியாத அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவது தான் என் நோக்கம்.

                   வகுப்பறையில் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் மந்திரங்களாக மாறுகின்றன. ஆதலால், மாணவர்களைப் பூஜிக்கும் வார்த்தைகள் பொருத்தே அவர்களின் வாழ்க்கையும் அமைகின்றன. இன்றைய இந்திய விண்வெளி ஆய்வியல் துறையின் தலைவர் திரு.சிவன் அவர்கள் கூறிய உண்மையைச் சற்று ஆய்ந்து  பார்க்க வேண்டும். மறைந்த முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இந்திய விண்வெளித் துறையில் தலைமையேற்றிற்கும் பொழுது, திரு.சிவம் அவர்கள் முக்கிய அதிகாரியாக இருந்திருக்கிறார். ஐயா அப்துல் கலாம் அவர்கள் யாராவது சின்னச்சின்ன கண்டுபிடிப்புகள் செய்து விட்டால் அதை பெரிதாகப் பாராட்டுவாராம். பாராட்டுவதை பெரிய கொள்கையாகவே வைத்திருந்தாராம். அவருடையப் பாராட்டிலும் வாழ்த்திலும் வளர்ந்தவர் தான் ஐயா திரு.சிவன் அவர்கள்.

                   அதேபோல் தான் வகுப்பறையிலும். ஆசிரியர்களின் பாராட்டுக்காகவும் வாழ்த்துக்காகவும் ஏங்கிக் கிடக்கும் மாணவர்கள் தான் எத்தனை எத்தனை? வசைப்பாடும் வாயை விட இசைப்பாடும் ரேடியோ எவ்வளவோ மேல் அல்லவா. பாடங்களால் மட்டும் மாணவர்கள் உருவாகிறார்கள் என்பது உண்மையென்றால் வார்த்தைகளாலும் வாழ்த்துகளாலும் மாணவர்கள் உருவாகிறார்கள் என்பது உண்மை. வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் நான் வாடினேன் என்று வள்ளலார் உருகினார். வகுப்பறையில் சாடிய மாணவனைக் கண்டபோதெல்லாம் நான் வருந்தினேன் என்று ஒலிக்கும் குரல் கேட்கத்தான் செய்கிறது. வகுப்பறையில் வாழ்த்துகள் பெற்ற மாணவன் மற்றவர்களை வாழ்த்துகிறான். அதே வகுப்பறையில் வீழ்த்தப்பட்ட மாணவன் மற்றவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். இஃது, உளவியல் பூர்வமான உண்மை.


                   ஒவ்வொரு ஜீவனும் ஒரு சிறு பாராட்டுக்குத்தானே ஏங்கி கிடக்கிறது. இதில் மாணவர்கள் எம்மாத்திரம். பாராட்டுவதையும் வாழ்த்துவதையும் ஒரு பண்பாடாகவே உருமாற்ற எல்லா ஆசிரியப் பெருமக்களும் முனைய வேண்டும். முனைப்புக் காட்ட வேண்டும். கேரித்தீவு மேற்கு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.கி.இராஜசேரன் அவர்கள் தன்னுடைய ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் ஆகியோரை வாழ்த்திப் பாராட்டுவதில் மிகச் சிறந்தவர். இவர் பாராட்டில் நனைந்தவர்கள் தான் அதிகம். இன்று இப்பள்ளி ஒரு சிறந்த நிலையை அடைவதற்கு இப்பாராட்டும் பண்பு பெரும் பங்காற்றியிருக்கிறது. இவர் போன்ற தலைமையாசிரியர்கள் இன்னும் இன்னும் நிறைய உருவாக வேண்டும். வாழ்த்துவோம்..வாழ்த்தப்படுவோம்.