நம்முடைய உடல் விண்ணை நோக்கி
வந்த அந்தத் தருணமே நம்முடைய எண்ணம் விண்ணை நோக்கி சென்று கொண்டிருப்பதை நம்மில்
எத்தனைப் பேர் அறிவர். “as above,so below” என்ற புனித நூலான பைபளின் தத்துவத்தைக் கொஞ்சம் ஆய்ந்து பாருங்கள். ‘மனிதர்கள் இறந்து போகலாம். ஆனால், எண்ணங்கள் இறப்பதில்லை’ என்று சிந்தனையாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி தன்னுடைய ‘எண்ணங்கள்’ என்ற நூலிலே உரைத்திருப்பதைக் காண
முடிகிறது. எண்ணங்கள் இறப்பதில்லை என்றால் அஃது எங்கு இருக்கிறது?
ஆம், அந்த இடத்திற்குப் பெயர் தான் உலகப் பேரேடு, ஆகாச அதிசயம், பிரபஞ்ச மனம் (Universal Mind), அல்லது மிகச் சாதாரனமாக எல்லாம்
அவன் செயல் என்று வானத்தைக் காட்டுகிறார்களே, அது தான் அந்த இடம். வெறித்துப் பார்ப்பவர்களுக்கு அது வெறும் வெற்றிடம்
தான். ஆனால், தெளிந்துப் பார்ப்பவர்களுக்கு அது
தான் ஆழ்மனத்தின் இரகசியம். பிறந்தக் குழந்தையைக் கவனித்துப் பாருங்கள். வானத்தை
நோக்கி இரகசியமாக சிரித்துக் கொண்டும்,
விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். அப்படி என்றால் அவர்களைச் சிரிக்க வைத்தது யார்? சும்மா எதுவும் நடக்காது என்பார்கள். குழந்தையும்
தெய்வமும் ஒன்று. இறைத் தூதர்கள் அல்லது தேவர்கள் குழந்தைகளின் கண்களுக்குத்
தெரிவது மனோவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை.
வள்ளுவப் பெருந்தகையாரும்
திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்குப் பிறகு வான் சிறப்பைப் பற்றிதான்
எழுதியிருக்கிறார். நமக்குத் தெரிவது மழைப் பொழிவது மட்டும் தான். எண்ணங்கள்
பொழிவதை நாம் பார்த்ததில்லை. இக்கட்டுரை நிச்சயம் உங்களுக்கு அதனைக் காட்டும்.
மனித மனம் மூன்று நிலையாக வகுக்கப்பட்டுள்ளது. முதலாவது நிலை புலனறிவு. இது காரண
காரியம் காட்டும் அறிவு. இரண்டாவது, ஆழ்மன அறிவு(sub-conscious mind). மனிதனின் முழு ஆற்றலை
வெளிப்படுத்தும் அறிவு. மூன்றாவதாக, பிரபஞ்ச அறிவு.
இவ்வறிவு மனித மூலையில் இருக்கும்
மூன்றாவது கண் எனப்படும் (Pineal Gland) உறுப்பில்
இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
நம்முடைய ஆள்மனம் பிரபஞ்ச
அறிவுடன் தொடர்பு கொண்டு நமக்கு வழி
காட்டுகிறது என்று உறுதியாகக் கூறப்படுகிறது. இந்த பிரபஞ்ச அறிவில் இருக்கும்
எண்ணிலடங்கா எண்ணக் குவியல்களை நியுட்ரினோ என்ற கதிர்கள் நம் மூளைக்குக் கொண்டு
வருவதாக அறிவியலாளர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். ‘என் வாழ்வில் நான் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகள் இரண்டே இரண்டு தான். அவை
இரண்டும் என் உள்ளுணர்வு தந்தவை’ என்று உலகப்
புகழ்பெற்ற அறிஞர் ஐன்ஸ்டைன் கூறுவதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த உள்ளுணர்வு
தான் ஆழ்மனத்தின் பிறப்பிடம். அந்தப் பிறப்பிடத்தைத் தட்டி எழுப்பும் சூட்சுமம்
நம்முடைய எண்ணங்கள்.
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று வள்ளுவப்
பெருமானார் கூறியது எப்படிப் பொருந்துகிறது பாருங்கள். விண்ணைத் தொடும்
எண்ணங்களோடு வாழ்ந்தால் இந்த மண்ணில் நமக்கேது கேடு? அதை அடையாவிட்டாலும் பரவாயில்லை,
அப்படி உயர்வாய் நினைப்பதை விட்டுவாடாதே என்று வள்ளுவர் வலியுறுத்துவதைச்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மனிதன் ஏழையாகவும், கல்வியற்றவனாகவும் பிறப்பது தவறில்லை. ஆனால், கடைசி வரை ஏழையாகவும், கல்வியற்றவனாகவும்
இருப்பது தானே தவறு. இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது நம்முடைய எண்ணங்கள்.
எண்ணங்களைச் செம்மைப்படுத்தும் போது வாழ்வு சிறக்கிறது.
எண்ணங்களுக்கு காந்த சக்தி
இருக்கிறது. அஃது ஒத்த எண்ணம் கொண்ட அனைத்தையும் உடனே ஈர்த்துக் கொள்ளும். அதனால்
தான் ஒரே சிந்தனையுடையவர்களின் உறவுகளே நீண்ட நாள் தொடரும். அப்படி இல்லாயின் அந்த
உறவு நிலைக்காது. ‘எண்ணமே முன்னேற்றத்தின் ஆணிவேர்’ என்பார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள்.
வெற்றிக்கும் தோல்விக்கும் எண்ணங்களே காரணமாக அமைகின்றன. உயர்வாய் நினைப்பன
நிச்சயம் நம்மை உயர்த்தும். ‘எண்ணங்களே உலகை ஆள்கின்றன’ என்ற வரிகள் உண்மையாயின் அந்த எண்ணங்கள் நம்மை ஆள எவ்வளவு நேரம் பிடிக்கும்? இந்தப் பிரபஞ்சம் நம்மைச் சூழ்ந்து இருக்கிறது.
பிரபஞ்ச அறிவும் நம்மைச் சூழ்ந்து இருக்கிறது. எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தில்
நம்முடைய எண்ணம் எப்படி உயிர்த்தெழும்?
சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்களே அது போன்றதுதான் எண்ணங்களும்.
சிறிய எண்ணங்களை உருவாக்கி அதன் மூலம் மிகப் பெரிய எண்ண அலைகளை உருவாக்க முடியும்.
‘உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின்(540)’ என்ற குறளின் வழி ஒருவன் சோர்வில்லாமல் விடாமல்
எண்ணினால் நிச்சயம் அவன் எண்ணியதை அடைவான் என்கிறார் திருவள்ளுவர். எவ்வளவு ஆழமான
உளவியல் உண்மை இது. இது எப்படியாயின்,
பிரபஞ்சத்தில் எண்ண அலைகள் மக்கள் மூலமாகவும், சம்பவங்கள் மூலமாகவும், சின்னங்கள்
மூலமாகவும், சகுனங்கள் மூலமாகவும் மற்றும்
கனவுகள் மூலமாகவும் நம்மிடம் பேசிகிறது என தாந்திரீகர்கள் சொல்லுகிறார்கள். அதற்கு
தேவை அமைதி, உற்று நோக்கும் தன்மை மற்றும்
கேட்டல் திறன். சித்தர்களும் யோகிகளும் பேசுவதை விட கேட்பதையே விரும்புவது இதனால்
தான். ‘செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம்
தலை’ என்று வள்ளுவப் பெருமானார்
உரைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. விண்ணைத் தொடும் எண்ணங்கள் இருப்பின் நிச்சயம்
வெற்றியடைந்த, எழுச்சிப் பெற்றச் சமூதாயமாக
உருவெடுக்க முடியும்.