எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 9 ஜூலை, 2016

தோப்புக்கரணம் ஒரு தண்டனை அல்ல தவம்...


                   தமிழ் வாழ தமிழ்ப்பள்ளி வாழ ஓர் அடையாளம் வேண்டுமல்லவா? இழந்த அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும். இருக்கின்ற அடையாளத்தை தற்காக்க வேண்டும். அப்படியொரு அடையாளம் தான் தோப்புக்கரணம். இது பெரும்பாலும் தண்டனையின் அடையாளமாகவே கருதப்பட்டது. முன்பெல்லாம் மாணவர்கள் தவறு செய்தால் தோப்புக்கரணம் போடச் செய்வார்கள். தோப்புக்கரணம் அன்று சாதாரணம். இன்று அது அசாதரணம். அன்று அது அடையாளம். இன்று அது மறக்கப்பட்ட வருங்காலம். மறந்த அந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் நோக்கம் தான் இக்கட்டுரை.

                   மூச்சுக் கடவுளாகிய விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவது வழக்கம். ஆனால், பள்ளியில் போட்டால் அது கலக்கம். ஆங்கிலத்தில் இதனை ‘super brain yoga’ என்று அழைக்கிறார்கள். அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் இதனை நிறைய ஆய்வுகள் செய்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

                   லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

                   தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.


                                                   Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
மேலும், ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காது மடல் வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. எனவே, இரண்டு காதையும், கைகளை மாற்றிப் பிடித்து தோப்புக் கரணம் போடும் போது தானாகவே நமது காதுகள் இழுபட்டு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், நமது நினைவாற்றல் நிச்சயமாக அதிகரிக்கும்.

                   இவ்வளவு அரிய பெரியப் பொக்கிஷத்தைத் தண்டனை என்ற பெயரில் விட்டுவிடலாமா? அதனால் தான், தோப்புக்கரணத்தைத் தவம் என்று குறிப்பிட்டேன். பள்ளிகளில் இப்பயிற்சியை மிகவும் இலகுவாக அமலாக்க முடியும். ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் சபைக்கூடும் நேரத்தின் போது மாணவர்களுக்கு இப்பயிற்சியினை வழங்கலாம். இதனைப் பழக்கமாக்கிவிட்டால் மாணவர்களே சுயமாக செய்து விடுவார்கள். காலையில் முதல் பாடத்திற்குச் செல்லும் எல்லா ஆசிரியர்களும் வகுப்பிலே நுழைந்தவுடன் இப்பயிற்சியினை வழங்கினால் இன்னும் இலகுவாக இருக்கும். இதற்கான நேரம்  மிகவும் குறுகியது. ஆனால், அதன் பலனோ எண்ணிலடங்காதவை.


                       இது மட்டும் அல்ல.. வகுப்பறையில் பாடம் படிக்கும் போது ஏதேனும் கேள்விக்கு பதிலை மறந்து விட்டால், ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து திருகினார்கள். அது வெறும் காதை பிடித்து திருகும் தண்டனை அல்ல. காதை அப்படியே திருகாமல், சற்று இழுத்து திருகும் போது நினைவுத் திறனுக்கான நரம்புகள் தூண்டப்பட்டு, அதன் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பதே காதை திருகும் தண்டனை. அதனால் தான் வள்ளுவப் பெருமானும் செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று மிக அழுத்தமாகக் கூறுகிறார். மாணவர்களின் காதுகளைச் சுயமாகவே பிடித்து விடும் படி ஆசிரியர்கள் தூண்டலாம். இந்த ஒரு நிமிடப் பயிற்சி நிச்சயம் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது உறுதி. ஆக, தோப்புக்கரணத்தை ஒரு தண்டனையாகக் கருதாமல் தவமாக நினைத்து அமல்படுத்தினால் மாணவர்களை எளிதில் நாம் வென்றுவிடலாம்.