எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 7 ஜூலை, 2016

ஆசிரியர் கூட்ட அறை...



                      தமிழ்ப்பள்ளிகள் சாதிக்க வேண்டும்...தரணியில் தரமோடு தவிழ வேண்டுமாயின் நிச்சயம் ஒவ்வொருவரும் தன் பள்ளியில் இருக்கும் கூட்ட அறையைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பள்ளியின் வளர்ச்சிக்கும் பள்ளியின் கூட்ட அறைக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு.

                      இங்கு குறையைப் பற்றி பேசுவதை விட நிறையைப் பற்றி நிறையவே பேச வேண்டிய எண்ணம்தான் நிறைந்துள்ளது. சாதித்தப் பள்ளிக்கும் சமாளிக்கும் பள்ளிக்கும் இருக்கும் வித்தியாசங்களில் இந்த கூட்ட அறையும் ஒன்று. வெற்றியடைந்த எல்லாப் பள்ளிகளிலும் நிச்சயம் சிறந்ததொரு ஆசிரியர் கூட்ட அறை இருக்கும். சமாளிக்கும் பள்ளிகளில் ஆசிரியர் கூட்ட அறை இருப்பது மிக அரிது.

                     பெரும்பாலான பள்ளிகள் ஆசிரியர் கூட்டங்களை ஆசிரியர் அறை,வகுப்பறை,அறிவியல் அறை மற்றும் நூல் நிலையம் போன்றவற்றில் நடத்துவார்கள். இங்கு நடத்தப்படும் கூட்டம் நிச்சயம் தரமுடையதாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், எல்லா ஆசிரியர்களும் ஒரு சேர கூட்டத்தில் கவனம் செலுத்த இயலாது. மேசையின் மீதுள்ளப் பொருட்கள்,மேசையின் ஒழுங்கின்மை போன்றவை காரணமாக அமையலாம்.

                     உண்மையில் ஒரு கூட்டத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் தலைமைத்துவம் சொல்வதைக் கவனமாக ஆசிரியர்கள் கேட்க வேண்டும். அப்படி கேட்காத பட்சத்திலே, என்னச் சொன்னாலும்,திட்டங்கள் கொண்டு வந்தாலும் நடைமுறைப் படுத்தச் சிரமம். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு..புரியாமலே இருப்பான் ஒருவன் என்பது உண்மை என்றால் அதே பூஜ்ஜிய வடிவத்தில் கூட்ட அறை இருப்பின் நிச்சயம் இங்கு நல்ல இராஜ்ஜியம் அமையும்.

                     ஒவ்வொரு கூட்டத்திலும் பேசப்படும் விடயங்கள் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நடந்த மிக மோசமான நிகழ்வினை இங்கு நினைவுக்கூற கடமைப்பட்டுள்ளேன். இந்நிகழ்விற்கும் நாம் விவாதிக்கும் கூட்ட அறைக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது.

                     1996-ஆம் ஆண்டு விண்வெளியில் தன் ஆய்வினை முடித்துக்கொண்டு பூமிக்கு புகுந்து சில நிமிடங்களில் தரையிறங்கும் சமயத்தில் நம் கண்முன்னே வெடித்துச் சிதறியக் காட்சி மறக்க இயலாதது. ஆம், உலகின் முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா அதில் அடுங்குவர். உலகமே உறைந்த அந்தக் கோரக் காட்சிக்கு ஒரு கூட்ட அறையே காரணம் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

                      அந்தக் கொலோம்பியக் கப்பல் விண்வெளியில் இருக்கும் பொழுது நுண்ணியத் துகழ்களால் தன் இரு இரக்கைகளிலும் சூழப்பட்டிருப்பதை பூமியில் உள்ள நாசா பொறியாயலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தத் துகழோடு பூமியில் புகுந்தால் நிச்சயம் அது வெடித்துச் சிதறிவிடும். இதனை உடனடியாகசரிச் செய்ய திடீர் கூட்டம் நடத்தப்பட்டது. இவ்விடயம் மேலதிகாரிகளுக்கு விளக்கப்படுவதற்கு முன்பே இரு முக்கிய அதிகாரிகள் கூட்டத்தை விட்டு சற்று நேரம் வெளியாகி விட்டனர். முடிவு எடுக்க முடியாத பட்சத்தில் தடுமாற்றம் எற்பட்டது.

                       இக்காலதாமதத்தின் நடுவே கொலம்பியா விண்கலம் பூமியில் புகுந்தது. நம் கண் முன்னே வெடித்தும் சிதறியது. அந்த மேலதிகாரிகள் வெளியேறியதற்கு வேறு காரணம் இருந்தாலும் கூட்ட அறையும் அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நாசாவிலேயே இந்நிலை என்றால் தம்முடைய தமிழ்ப்ள்ளிகளின் நிலை என்ன? தலைமைத்துவத்தின் மூலமாக எவ்வளவோ பேசப்படுகின்றன. ஆனால், அவையாவும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதே கேள்வி. பேசியவை எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்றைய தமிழ்ப்பள்ளிகளில் நிலை என்ன?

                       சமீபத்தில் வெளியான ஆங்கிலத்திரைப்படம் Everest’. ஒரு தலைவன் எடுத்த முடிவால் 9 உயிர்கள் பலியாகின்றன. இஃது உண்மைச் சம்பவமும் கூட. மலையேறுவதற்கு முன்பதாக  கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லா மலையேறிகளுக்கும் கூடாரத்தின் உள்ளே கூட்டம் ஒன்று நடத்தப்படுகிறது. கூடுவதற்கு இடம் இல்லாவிட்டாலும் தற்காலிக கூடாரம் அமைத்து தான் கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்ப்பள்ளிகளில் இந்நிலை இல்லையே.

                      ஒர் அறை என்பது ஒரு தாயின் கருவறையைப் போன்றது. அந்தக் கரு இருட்டின் வெளிச்சம் தான் கூட்டத்தில் பேசப்படுபவைகள். உருமாறுவதும் உருக்குலைந்துப் போவதும் அவரவர் அறையைப் பொறுத்தது. பள்ளியில் எத்தனை அறைகள் இருப்பினும் அத்தனைக்கும் தாய் அறையாக இருப்பது கூட்ட அறையே. தாயைக் கவனிக்காமல் இருந்தால் எப்படி வாழ இயலும்?

                     ஆசிரியர்களின் சிந்தனைகளை மாற்றவேண்டும், அவர்களை ஒன்றிணைக்க வேண்டும், மிகச் சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் போன்றக் கடமைகளைக் கொண்டிருந்தால் நிச்சயம் கூட்ட அறை இருந்தாக வேண்டும். அங்கு தான் இதற்கான விதை விதைக்கப்படுகிறது. ஆக, மாற்ற வேண்டியது ஆசிரியர்களை அல்ல, மாறாக ஒர் அறையைத்தான்.

                      எந்த அறையாக இருந்தாலும் அதற்கென்று ஒரு சக்தி இருக்கிறது.பூஜை அறைக்கு மட்டும் எப்படி இவ்வளவு அதிர்வுகள் வந்தது? யோசித்துப் பார்க்க வேண்டும். அதேப் போல் தான் கூட்ட அறைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அது அலைகளாக மாறி முழுப் பள்ளியையே பாதிப்படையச் செய்கிறது.  கூட்ட அறை இல்லாதப் பள்ளி கரைச்சேர இயலாது.