எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

எண்ணங்களே விண்ணை ஆள்கின்றன (பாகம் 2)...



                   நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே மாறிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய் என்று உபநிடதம் உரைப்பதைக் கொஞ்சம் செவிக்கொடுத்துக் கேளுங்கள். எல்லாம் எண்ணங்களிலிருந்து தான் ஆரம்பமாகிறது. உபநிடதத்தில் தத்துவமசி என்று அரியதொரு சொல் வருகிறது. தத் என்றால் அது, துவம் என்றால் நீ, அசி என்றால் ஆகிறாய். நீ அதுவாக ஆகிறாய். எதுவாக? நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
                  
                   எண்ணங்களை ஒரு முகப்படுத்தும் போது ஒளி பிறக்கிறது. எண்ணம் ஒரு வகையான ஒளி. ஒளி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும். எண்ணமும் அது போல தான். 100 கோடி நியுரோன்களின் செயல்பாடுகளே எண்ணங்களின் உருவாக்கம். மூளையின் செயல்பாட்டில் இலெக்ரோகெமிக்கல் என்கிற இரு வகையான இராசாயண உருமாற்றம் ஏற்படுகிறது. ஒன்று நெர்வஸ் சிஸ்டம். அஃது மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது. இரண்டு, எண்டோகிரின் சிஸ்டம். அஃது இராசாயணத்தைப் பாய்ச்சுகிறது. மூளையில் உள்ள ஐப்போதெலமஸ் என்கிற சுரப்பியிலிருந்து இந்த இராசாயணம் வெளியாகிறது என்று ஆய்வியலாளர்கள் நிரூபித்திருக்கின்றனர். குவான்தம் பிஸிக்ஸ்ஸில் (Quantum Physicists) இந்த பிரபஞ்சம் முழுதும் எண்ணங்களாலேயே கோர்க்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

                   எண்ணத்தின் வலிமையை உடனடியாக அறிய வேண்டின் கோயிலுக்கும் ஒரு இறந்தவர் வீட்டிற்கும் ஒப்பிட்டுப் பாருங்கள். கோவிலுக்குச் சென்றால் ஒரு வித மன அமைதி, நிம்மதி ஏற்படும். மாறாக, இறந்தவர் வீட்டிற்குச் செல்லும் முன்பே நம் மனம் கலங்கி விடும். அங்கு சென்றவுடன் கண்கள் கலங்கும். மனம் சஞ்சலப்படும். எப்படி இது நிகழ்ந்தது? அங்கு சூழ்ந்துள்ள எண்ணங்களே காரணமாகும். விண்வெளியில் இரு வகையான பேரேடுகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒன்று, நேர்மறையான பேரேடு. இதிலிருந்து நல்ல எண்ணங்கள் நமக்கு கிடைக்கின்றன. மற்றொண்டு, எதிர் மறையான எண்ணங்கள். இதிலிருந்து நமக்கு எதிர் மறையான எண்ணங்கள் கிடைக்கின்றன.

                   நம் மனதில் உதிர்க்கும் ஒவ்வொரு எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்புடையவை. எண்ணங்கள் சொற்களாக வெளி வரும் முன்பே அஃது மனதையும் உடலையும் பாதித்து விட்டுதான் வெளி வருகிறது. பிறகு தான் அது வார்த்தைகளாக மாறி சூழ்நிலைகளை உருவாக்குகிறது. சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும் எண்ணங்களைப் பொருத்தே சூழ்நிலைகளின் தன்மைகள் அமைகின்றன. இதுவே, நன்மையும் தீமையுமாக உருவாகி நம்மை வந்து சேர்கின்றது.

                   இரண்டு தவளைகள் தவறுதலாக பால் நிறைந்த கண்ணாடிக் குவளைக்குள் விழுந்து விட்டது. விழுந்து விட்ட இரு தவளைகளும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தத்தளித்தன. தடுமாறின. அதிர்ச்சியில் தள்ளாடின. இருப்பினும் இரு தவளைகளும் மேல் எழும்புவதற்காக தன் நான்கு கால்களாலும் மேலும் கீழுமாக அடிக்கத் துவங்கின. கொஞ்ச நேரம் கழித்து ஒரு தவளை களைத்துப் போய் இனி, முடியாது.நான் செத்தேன் என்று தனது முயற்சியைக் கை விட்டன. பரிதாபமாக அது செத்துப் போனது. இன்னொரு தவளையானது கொஞ்சம் விடா முயற்சியுடன் இன்னும் வேகமாக தத்தளிக்க முயன்றது. கால்களை வேகமாக அடிக்க அடிக்க நுரை அதிகமாக கிளம்பி தவளை மேலெழும்பி கீழே குதித்தது.

                   அது வெறும் கதை அல்ல; நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விதை. நீ எதை விதைத்தாயோ அதை அறுவடை செய்வாய் என்று ஏசுபிரான் மிக அழகாக கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. அதனால் தான், குழந்தை மனோவியலில்  ஒரு தாயின் கற்பக்காலம் என்பது இறைநிலைக்கு சமமானது, ஆறு மாதங்கள் வரை தேவைதைகளுக்குச் சமமானது, ஆறு மாதம் முதல் மூன்று வயது வரை குரு நிலைக்குச் சமமானது, மூன்று வயது முதல் ஏழு வயது வரை சக்தி நிலைக்குச் சம மானது, ஏழு வயது இன்று வரை எண்ணங்களின் பதிவுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. எண்ணங்களின் பதிவுகளே நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. இன்றைய நினைவுகள் நாளையப் பதிவுகள். எண்ணங்களை மாற்றினால் வாழ்க்கை மாறிவிடும் என்று இதனால் கூறினர்.

                   தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை என்று திருமூலர் உரைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. தன்னை அறிதல் என்பது நம் எண்ணங்களைக் கவனிக்க வேண்டும். விதைத்தது சரியாக இருந்தால் நிச்சயம் முளைத்தது செழிப்பாகத் தான் இருக்கும். நம் ஏற்படும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அடிப்படையாய் இருப்பது நம் எண்ணங்களே. அகநிலையில் அனைத்தும் புதைந்துக் கிடக்கிறது. ஆனால், நம் மனம் புறநிலையையே நோக்கிச் செல்லும். அனைத்து குறைகளும் இங்கு தான் முளைக்கின்றன. கண்ணிற்குத் தெரிந்த இரகசியங்களை(புறநிலை) நான் ஆய்ந்தறிந்து விட்டேன். ஆனால், கண்ணிற்குத் தெரியாத இரகசியங்களை(அகநிலை) நான் மறந்து விட்டேன் என்று தன் வயோதிக நிலையில் புலம்பியது யார் என்று தெரியுமா? ஆம், அவர் தான் இருபத்தொராம் நூற்றாண்டின் முதல் மனிதராகப் போற்றப்பட்ட அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்டைன்.


                   “The empire of the future will be empire of the mind” என்று பிரிட்டிஸ் அரச தந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் உரைத்திருப்பதை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்கிறேன். வருங்காலத்தை ஆளப் போவது நிச்சயம் இன்று விதைக்கப்படும் எண்ணங்களே. அதனால் தான் ஐயா அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள்  என்று மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து முழங்கினார்.