சுவாத்தியமான பிரதேசம் (comfort zone) என்பது உருவாகவில்லை; உருவாக்கப்படுகிறது. நாட்டில் உள்ள 10,000 தமிழாசிரியர்கள் தாங்களாகவே சுயமாக உருவாக்கியது தான் இந்த சுவாத்தியமான
பிரதேசம். 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை ஒர் ஆசிரியர் ஒரு பள்ளியில்
பணியாற்றுவதே ஆசிரியர்களின் சுவாத்தியமான பிரதேசம். பத்தாயிரம் தமிழாசிரியர்களில்
ஏறக்குறைய 75% தமிழாசிரியர்கள் சுவாத்திய பிரதேசத்தில் வாழ்கிறார்கள். அவர்கள்
வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப்பள்ளிகள் வீழ்கிறது என்பது
நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்துள்ளோம்.
வாழ்வில் வீழ்வதற்கும் இந்த
சுவாத்தியப் பிரதேசத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இந்த உலகத்தை வாழ்ந்த
ஆண்ட டைனசோர் மிருகம் இப்பொழுது எங்கே போனது? அத்தனை டைனசோர்களில் ஒன்று கூட இன்று உயிரோடு ஏன் இல்லை? மாற்றத்தை ஏற்றக் கொள்ளாத ஒரே காரணத்திற்காக அந்த
இனம் இந்த பூமியை விட்டு அழிந்தது. அழிந்தது அந்த டைனசோர் மட்டும் அல்ல; அதனோடு சேர்ந்து பூமியின் இயற்கைச் சூழலும்
ஒடுங்கிப் போனது. ஆசிரியர்களும் அப்படித்தான். தயவு செய்து மாற்றங்களை ஏற்றுக்
கொள்ளுங்கள். 90-ஆம் மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் இந்த உலகையே ஆண்ட ‘நோக்கியா’ கைப்பேசியை நம்மால் மறக்க முடியுமா?
40% உலக கைப்பேசி வர்த்தகத்தை
தன்னகத்தே கொண்டிருந்த நோக்கியா மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாததால் ஏப்பல் ஐபோனிடம்
தோற்றுப் போனது. இன்று வரை பின்லாந்து நாட்டின் நோக்கியா கைப்பேசி எழ முடியவே
இல்லை. டைனசோரும், நோக்கியா கைப்பேசியும் ஒரு வகையான
சுவாத்தியமான பிரதேசத்தில் வாழ்ந்ததால்,
தன்னடையாளத்தை அஃது இழந்தது. ஒன்று அழிந்து விட்டது. மற்றொன்று, இன்னமும் எழ முடியவில்லை. கல்விக்கூடம் என்பது
மாற்றத்திற்கு உரிய ஓர் இடம். காலத்திற்கு ஏற்றார் போல பாடத்திட்டங்கள் மாறிக்
கொண்டே இருக்கும். பாடத்திட்டம் மட்டும் அல்ல, கல்வி கொள்கையே மாற்றம் காண்கிறது , ஆசிரியர்கள் மாற்றம் எம்மாத்திரம்?
மனிதனால் உருவாக்கப்பட்ட
அனைத்துமே ஒரு மாற்றத்திற்கு உரியது. மலாய் மொழியில் ‘jauh perjalanan luas pengetahuan’ என்று சொல்வார்கள். அறிவைப்
பெருக்குவதற்கு நிச்சயமாக ஓரிரு பள்ளிகள் போதாது. பல பள்ளிகளைக் கடக்கும் போதுதான்
ஓர் அதீத ஆசிரியர் பிறக்கிறார். ‘நம் வாழ்வில்
நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக இருப்பது அறிவு அல்ல; மாறாக குணாதிசயங்களே’ என்று பகவத்கீதை பகீரங்கமாக பறை சாற்றுகிறது. மனிதனின் குணாதிசயங்களே
ஒவ்வொன்றையும் ஆரம்பிக்கின்றது, பிறகு முடித்து
வைக்கிறது. ஒரே பள்ளியில் பல ஆண்டுகள் போதிக்கும் ஆசிரியர்களுக்கும், பலப் பள்ளிகளைக் கடந்து போதிக்கும்
ஆசிரியர்களுக்கும் நிறைவே வித்தியாசங்கள் உண்டு. இதை வெளிப்படையாகச் சொன்னால்
நிச்சயமாக ஆசிரியர்கள் என் கோபப்படுவார்கள். ஆனால், அது தான் உண்மை.
மனோவியலில் யானையை வைத்து ஓர்
ஆய்வு செய்தார்கள். ஒரு குட்டி யானையைக் கோயில் பின்னால் ஒரு கம்பத்தில் கட்டி
விட்டார்கள். காலில் கட்டப்பட்ட அந்தக் குட்டி யானை அந்தக் கம்பத்தையே சுற்றி
வந்து கொண்டிருக்கும். ஆண்டுகள் பல கழிந்தப் பின் அந்தக் குட்டி யானையைக் கழற்றி
விட்டார்கள். நடந்தது பெரும் ஆச்சர்யம். அந்தக் குட்டி யானை அந்தக் கம்பத்தைத்
தவிர வேறு எங்குமே செல்ல மறுத்தது. இந்த நிலைதான் சுவாத்தியமான பிரதேசத்தில்
வாழும் ஆசிரியர்களுக்கும். தான் அடைப்பட்டு வாழ்கிறோம் என்று உணராமல்
ஆசிரியப்பணியை முடித்து விடுவது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயம். முடங்கிக்
கிடந்தால் சிலந்திக் கூட நம்மைச் சிறைப்பிடித்து விடும் என்பார்கள். எழுந்து
நடந்தால் இமயம் கூட நமக்கு வழிவிடும் என்பதனை மறந்து விடக்கூடாது.
இஸ்லாம் சமயம் இன்று உலகம்
முழுதும் பரவுவதற்கு மூலக் காரணமே அன்னல் பெருமான் அவர்கள் மெக்காவில் இருந்து
மடினாவிற்கு மாறியது தான். அந்த மாற்றத்தை ‘ஹிஜ்ரா’ என்று இஸ்லாமியர்கள்
கொண்டாடுகிறார்கள். அன்னல் பெருமான் காட்டிய அவ்வழியானது இன்று உலகம் முழுதும்
இஸ்லாம் மார்க்கம் பரந்து கிடக்கிறது. அப்படியொரு மாற்றத்தை ஆசிரியர்களும் ஏன்
பின்பற்றக்கூடாது? கம்ப இராமாயணத்தில் இராமன் 14
ஆண்டுகள் வனவாசம் செல்லா விட்டால் இராமாயணம் தோன்றியிருக்காது. ஒரு மாற்றம்
இன்னொரு பரிணாமம் என்பதனை மறக்கலாகாது. மாற்றத்தை முதலில் தன்னுள் இருந்து
தொடங்குங்கள். விண்ணையும் ஆளலாம்.
கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் நம்முள்ளே மாறிக்
கொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றிலும் நிமிடக் கணக்கில் கோடானக்கோடி தகவல்கள்
பரிமாறப்படுகின்றன. சுவாத்தியமான பிரதேசத்தை தயவு செய்து உதரித் தள்ளிவிடுங்கள்.
மறுநடவு புது விளைச்சலைத் தருவது போல்,
ஆசிரியர்களின் மாற்றமானது நிச்சயம் வளர்ச்சியைத் தரும் என்பது திண்ணம்.